ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி வனப்பகுதி வரை உள்ளது. இங்குள்ள புளிங்கோம்பை என்கிற வனகிராமம் மலையடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள மக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் வனப்பகுதியில் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டுப் பார்த்து விட்டனர் எதுவும் நடக்கவில்லை. இன்று இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
அவர்கள் அந்த மனுவில், "நாங்கள் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் புளியங்கோம்பை கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு மன்பு கட்டப்பட்ட ஒரு குறுகிய வடிகால் சாக்கடை நீர் அப்படியே தேங்கியுள்ளது. இந்த வடிகால்களை அகலப்படுத்தி தரவேண்டும். இக்கிராமத்தில் ஒரு பொதுக்கழிப்பிடம் மட்டுமே உள்ளதால் பெண்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கெ ஒரு சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். இங்கு ஆற்று குடிநீர் லாரிகளில் விநியோகிக்கப்படுவதால் அனைத்து குடும்பங்களுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதில்லை. எனவே பைப்லைன் அமைத்து ஆற்று குடிநீர் வழங்கவேண்டும்" குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வழக்கம் போல் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி மக்களை அனுப்பி விட்டனர்.
ஒரு நகராட்சிக்குட்பட்ட ஒரு பகுதி மக்கள் இந்த 2020ல் கேட்பது ஐயா ஒரு சாக்கடை, ஒரு பொதுக்கழிப்பிடம், குழாய் மூலம் குடிநீர் இவைகள்தான்... யாரும் வெட்கப்படாதீர்கள்... இது டிஜிட்டல் இந்தியா...