திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக வேலை பார்ப்பவர் சேகர். இவர் முசிறி எஸ்.பி. அலுவலகத்தில் வேலை செய்தபோது மணல் கடத்தல் பிரச்சனையில் சிக்கி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பிறகு சில மாதம் கழித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
அதே நாளில் மணச்சநல்லூர் காவல் நிலைய உளவுப்பிரிவு கான்ஸ்டபிள் வினோத், வாத்தலை காவல் நிலைய உளவுப்பிரிவு கார்த்தி ஆகியோரும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
வழக்கமாக மாவட்ட காவல்துறையின் கீழ்மட்ட இடமாற்றங்கள் எப்போதும் எஸ்.பி. உத்தரவின் பெயரில் அறிவிப்பு செய்யப்படும். ஆனால் இந்த மூன்று பேரின் இடமாற்றமும் டி.ஐ.ஜி. அலுவலக நடவடிக்கை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட காவல்துறையில் ஒரே நாளில் 2 உளவு கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருப்பது பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் போலீஸ் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. மாற்றத்திற்கான காரணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, மணல் கடத்தல் விவகாரங்களில் தொடர்ச்சியாக கண்டிப்பு காட்டிவரும் டிஐஜி பாலகிருஷ்ணன், சமீபத்தில் சப் இன்ஸ்பெக்டர் அகிலா, உளவு கான்ஸ்டபிள் மனோகரன், செல்வகுமார் ஆகியோரை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்தார்.
மணல் கடத்தல்காரர்களுக்கு துணையாக செயல்படுவதே இவர்களின் மாற்றத்திற்கு காரணமாக கூறப்பட்டது. தற்போது அடுத்தகட்டமாக வினோத், கார்த்தி, சேகர் மாற்றத்திற்கு முக்கிய காரணம் மணல் விவகாரமே இருக்கும் என்கிறார்கள்.
தொடர்ச்சியாக உளவு போலீஸ்கார்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிரடியாக இடமாற்றம் செய்து வருவது உளவு போலீசுக்கும் தனிப்படை போலீசுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.