திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அந்த மூன்று மகன்களில் ஒருவரான செந்தில் என்பவர், உப்பிலியபுரம் மெயின் ரோட்டில் உள்ள அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான 2 கடைகளில் ஒன்றை டிவி ரிப்பேர் செய்யும் கடையாக நடத்திவருகிறார். மேலும், அப்பகுதியில் கேபிள் தொழிலும் செய்துவருகிறார்.
இவரின் நண்பரான உப்பிலியபுரம் ஒன்றிய பாஜக தலைவரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருபவருமான ரமேஷ் என்பவருக்கு, பூட்டப்பட்டிருந்த மற்றொரு கடையை வாடகைக்கு விட செந்தில் சம்மதித்திருப்பதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, கடையைத் திறப்பதற்காக அவர் வந்தபோது, செந்திலின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செந்தில் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆக்கிரமித்துள்ளதாகவும், இதைத் தட்டிக்கேட்டதற்கு, ரமேஷ் அடியாட்களுடன் தன்னை தாக்கியதோடு, தனது தாயார் சந்திராவை மிரட்டி கடையைத் தனக்கு வாடகைக்குத் தந்ததாக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட துன்புறுத்தியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ரமேஷ் கொடுத்த புகாரில், கடையை வாடகைக்கு விட சம்மதித்து, தற்போது மறுப்பு தெரிவித்ததோடு, தன்னைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு மனுக்களைப் பெற்றுக்கொண்ட உப்பிலியபுரம் போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.