தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், பூங்கொடி தம்பதியரின் மகள் கலையரசி (வயது 23) எம்.எஸ்.சி கணித பாடப்பிரிவை படித்துள்ளார். இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் வெங்கடேசன் என்பவரும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடக் காலமாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி வேலைக்கு சென்ற கலையரசி வீடு திரும்பவில்லை எனவும் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் கலையரசியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று காரிமங்கலம் காவல்துறையினர் கலையரசியின் பெற்றோரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். பெற்றோர் வந்து பார்த்தபோது கலையரசியும் அவரது காதலன் வெங்கடேஷ் இருவரும் இருந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணையின் போது இருவரும் கடந்த ஒரு வருடக் காலமாகக் காதலித்து வந்ததாகவும் 21ஆம் தேதிக்கு பிறகு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டுள்ளனர். ஆனால், காவல்துறையினர் இருவருக்கும் பாதுகாப்பு தர முடியாது எனவும் இருவரும் பிரிந்து செல்லவும் எனக் கூறி காலையில் இருந்து மாலை வரை கண்டு கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மனமுடைந்த காதல் ஜோடி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காதல் ஜோடியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.