சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் பொன்னம்பல மேடையின் மீது ஏறி தெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை எனப்படும் பொன்னம்பல மேடை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்க உத்தரவிட்டார். அதன்படி, பொன்னம்பல மேடை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று (19/05/2022) மாலை முதல் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பொதுமக்கள் பொன்னம்பல மேடை மீது ஏறி நின்று நடராஜரைத் தரிசனம் செய்து வருகின்றனர்.