கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், திருவண்ணாமலை உட்பட வட மாவட்டங்களில், விவசாயிகள் மக்காச்சோளம், மரவள்ளி, பருத்தி, உளுந்து போன்ற பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துள்ளனர்.
குறிப்பாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள இடைச் செருவாய், கீழ் செருவாய், ஏந்தல் வெங்கனூர், ஆலம்பாடி, பாசார், லக்கூர், ஆலத்தூர், கீழகல் பூண்டி, கண்டமத்தான், புலி கரம், பலூர், தொழுதூர், புலிவலம், கீரனூர், நெடுங்குளம், நிதி நத்தம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம், பருத்திப் பயிர்களை மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
தற்போது மழையால் பயிர்கள் நன்றாகச் செழித்து வளர்ந்துள்ளன. இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் மான், காட்டுப்பன்றி, மயில்கள் போன்றவைகள் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாகக் காட்டுப்பன்றிகள் மக்காச் சோளத்தைத் தின்று நாசப்படுத்தி வருகின்றன. இதனால், விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "ஒரு பக்கம் விவசாயப் பயிர்களில் புழுத் தாக்குதல். இதனால், பயிர்கள் சேதம் அடைகின்றன. இன்னொரு பக்கம் காட்டு விலங்குகள் புகுந்து, விளையும் பயிர்களைக் கடித்துக் குதறி நாசம் செய்கின்றன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் இதே பரிதாப நிலை தொடர்கிறது. மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்து பிழைக்க முடியாமல், நஷ்டத்தில் கடனாளியாகி நிற்கிறோம். எனவே, அரசு வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் விவசாய விளைபொருட்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடாக வனத்துறை சார்பில் வழங்கவேண்டும். இது சம்பந்தமாக வேளாண் துறை, வனத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் நிலங்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு கிடைக்க ஆவண செய்ய வேண்டும்" என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.