பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்திய போலீஸ்கார்களுக்கு 15 வருடங்களுக்குப் பிறகு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பா. 49 வயது விதவைப் பெண்ணான இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். கணவனை இழந்த பாப்பா தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருடைய ஒரே மகள் சாந்தி கேரள மாநிலம் மூணாரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதியன்று பாப்பாவின் பக்கத்து வீட்டுப் பெண் லட்சுமி என்பவருடைய வீட்டில் இரண்டரை பவுன் தங்க நகை காணாமல் போனது. இது குறித்து புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அப்போது காணாமல் போன நகை குறித்து விசாரணை செய்வதற்காக அன்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் விமல்காந்த் மற்றும் எஸ்.ஐ காந்திமதி ஆகியோர் காசிலிங்கபுரத்துக்கு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பாப்பாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். நகை பற்றிய விசாரணை என்ற பெயரில் வீட்டை சேதப்படுத்தியதுடன் பாப்பாவை அடித்து உதைத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
‘காணாமல் போன நகையை எங்க வெச்சி இருக்க. ஒழுங்கா நகையைக் கொடுத்துடு’ என்று தகாத வார்த்தைகளால் பாப்பாவை டார்ச்சர் செய்துள்ளனர். அப்போது, வயது மூத்தப் பெண் என்று கூட பார்க்காமல் லத்தியாலும், பூட்ஸ் காலாலும் பாப்பாவைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதலை தாங்க முடியாத பாப்பா அலறித் துடித்துள்ளார். அதன் பிறகு, காவல்நிலையத்துக்கு காசிலிங்கபுரம் கிராம மக்கள் திரண்டு வந்த நிலையில், அன்றிரவு 8 மணியளவில் பொதுமக்களிடம் பாப்பாவை ஒப்படைத்தனர். பின்னர், போலீசாரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த பாப்பா 22 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், பாப்பாவின் இரண்டு கைகளும், கால் விரல்களும் உடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட பாப்பா போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் விமல்காந்த் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் தலைமையிடத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் வசித்து வருகிறார். அதே சமயம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய காந்திமதி பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்களம் காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். அதன் பிறகு, இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டப் பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் விமல்காந்த் மற்றும் உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகியோருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, பாப்பாவின் வழக்கறிஞர் அதிசயகுமார் கூறும்போது, “விசாரணை என்ற பெயரில் பாப்பாவைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அன்றைய இரவு, ஊர் முக்கியப் புள்ளிகள் இரண்டு பேரை வரவழைத்தப் போலீசார், அவர்களிடம் பாப்பாவை நல்ல முறையில் ஒப்படைத்ததாக எழுதியும் வாங்கியிருக்கிறார்கள்.” என்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.