சிதம்பரம் அருகே இருளர் பழங்குடி மாணவிக்கு நடக்க இருந்த கட்டாய குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர்.
சிதம்பரம் அருகே கிள்ளை தளபதி நகரைச் சேர்ந்த மீனா, ராஜா தம்பதியினருக்கு 17 வயது மற்றும் 11 வயதில் இரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் 17 வயதுள்ள தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்குச் செல்கிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் அக்கா மகன் செல்வா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு வறுமையின் காரணமாகச் சிறுவயதில் தேவியை திருமண பந்தம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.
அதன்படி தற்போது கோடை விடுமுறை நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு ராஜா குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு செல்வா குடும்பத்தையும் வரவழைத்துத் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இந்தத் திருமணத்திற்கு தேவிக்கு உடன்படவில்லை. பின்னர் அவர் எப்படியாவது 12 ஆம் வகுப்பு படித்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணி இரவில் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நடந்தே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் இந்தச் சிறுமியைப் பார்த்து யார்? இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு தேவி அழுதுகொண்டே நடந்த விபரத்தைச் சொன்னவுடன் அவர் தேவியை பேருந்து நிலையம் அழைத்து வந்து டீ, பன் வாங்கிக் கொடுத்து சிதம்பரத்திற்கு பேருந்து ஏற்றி அனுப்பியுள்ளார்.
பின்னர் சிதம்பரம் வந்த தேவி கிள்ளை தளபதி நகர் கிராம தலைவர் சின்னமணி வீட்டிற்குச் சென்று நடந்த தகவலைக் கூறி படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் அதிர்ச்சி அடைந்து தேவியிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது தேவி, போலீஸ் கேஸ் வேண்டாம் சார் எங்க அப்பா, அம்மா பாவம் என்று கண் கலங்கியுள்ளார். இது அங்கிருந்த அனைவரின் கண்களைக் குளமாக்கியது. கிள்ளை ரவீந்திரன் தேவியின் அப்பா ராஜாவிற்கு ஃபோன் செய்து உடனே கிள்ளைக்கு வர வேண்டும் இல்லையேல் நீ இருக்கும் இடம் தேடி போலீஸ் வரும் என்று எச்சரித்துள்ளார்.
இதனைக் கேட்ட ராஜா உடனே ஊருக்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார். அப்போது கிள்ளை ரவீந்திரன், கிள்ளை தளபதி நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ராஜா குடும்பத்தை அழைத்து ராஜா மற்றும் அவரது மனைவிக்கு அறிவுரை வழங்கி, தேவி கல்லூரி படிப்பு முடியும் வரை முழு செலவை அவரே ஏற்றுக் கொள்வதாகவும் படிப்பைப் பற்றி இனி கவலை வேண்டாம் என்றும், எந்தத் தொந்தரவு இல்லாமல் படிக்க விடுங்க எனக்கூறி திருமண நேரத்தில் தேவையான உதவியையும் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும் கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் Al கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தேவி மீது தனி கவனம் செலுத்தி நல்ல முறையில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்குத் தேவையான பள்ளிக் கட்டணம் மற்றும் புத்தகம் உள்ளிட்டவை குறித்து அவரே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவியின் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்தத் தகவல் அறிந்து கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.