துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். இது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெரியார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இருந்த போதிலும் ரஜினி மன்னிப்புக்கேட்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு குறித்து காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினியை சந்தித்துப் பேசினார். அப்போது தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.