சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது. கடந்த ஆறு மணி நேரத்தில் 16 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும். 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதே நிலையில் நகர்ந்து செல்லும். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்தது. இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்" எனத் தெரிவித்தார்.