பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளுக்காக 2,910 களப்பணியாளர்களை சேலம் மாநகராட்சி களமிறக்கி உள்ளது.
கரோனா காய்ச்சல் தடுப்புப் பணிகளை சேலம் மாநகராட்சி, கடந்த 7 மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவுமும் அபாயமும் உருவாகியுள்ளது.
இதையடுத்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகர பகுதிகளில் தீவிர துப்புரவுப் பணிகள், நோய்த்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதோடு, 2060 தூய்மைப் பணியாளர்கள், 60 மலேரியா பணியாளர்கள், 60 சுகாதார மேற்பார்வையாளர்கள், 700 கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள் மற்றும் 30 பரப்புரையாளர்கள் என மொத்தம் 2,910 களப்பணியாளர்கள் தீவிர டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி திரவ குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசுப்புழுக்கள், தேங்கியுள்ள சுத்தமான நீரில்தான் உற்பத்தி ஆகும் என்பதால், குடிநீரையும் பல நாள்களுக்கு பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
குடிநீரை 3 நாள்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக் கொள்வதுடன், பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
வீடுகள், நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை தெருக்களிலும், சாக்கடைக் கால்வாயிலும் கொட்டாமல் திடக்கழிவுகளை சேகரிக்க நேரில் வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
காலி மனைகளில் உள்ள குப்பைகள், முள்புதர்கள், மழைநீரினை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தொற்று நோய் ஏற்படாத வகையில் சுத்தப்படுத்தி பராமரித்திட வேண்டும்.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க்குகள், வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்களிலும் மழைநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
பயன்படுத்தப்படாத பழைய இரும்பு, தகர பொருள்கள், எரிபொருள் கேன்கள், உடைந்த உதிரி பாகங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி களப்பணியாளர்கள் தினந்தோறும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்புறங்களில் உள்ள இடங்களில் பார்வையிட்டு உரிய பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.