தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் வேலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம்மே ஒப்புக்கொண்டுள்ளது. டெங்கு மரணங்களும் தினம் தினம் நடந்தபடி இருக்கின்றன. இதுவரை 4 குழந்தைகள், 3 பெரியவர்கள் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காந்தம்மாள் என்கிற 65 வயது மூதாட்டி, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் மரணத்தை தழுவியுள்ளார்.
இப்படி தினம் தினம் டெங்கு மரணங்கள் நிகழும் நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக டெங்கு விழிப்புணர்வு பணியில் இறங்கியுள்ளன. வேலூர் பாராளமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அக்டோபர் 25ந்தேதி காலை, காட்பாடியின் பல பகுதிகளில் தெருதெருவாக நடந்து சென்று, சாலையில் காய்கறி வியாபாரம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், இல்லத்தரசிகள், காலையில் பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு கப்களில் நிலவேம்பு காசாயத்தை வழங்கி குடிக்கச்சொன்னார். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தால் டெங்கு பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பலாம் எனச்சொல்லி அதனை தந்து, தானும் அருந்தினார்.
திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் களமிறங்கி விழிப்புணர்வு பணியில் ஈடுப்பட்டுள்ள அதே நேரத்தில் ரஜினி மக்கள் மன்றம், ரெட்கிராஸ், காவல்துறை என பல அமைப்புகளும் களம்மிறங்கி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.