திருச்சி மாவட்டத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதோடு கால் நடைகளாலும் நாய்களின் பெருக்கம் அதிகரித்ததாலும் தொடர்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வாகன ஓட்டிகள், ரத்தக்காயங்களுடன் கட்டுப்போட்டு கொண்டது போல் நூதன போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில் மாநகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சாலைகளில் நடக்கவோ, வாகனம் ஓட்டவோ முடியாத நிலை உள்ளது. விரைந்து பணி முடித்து சாலைகளை சீரமைத்து தரமான தெருச்சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டம் இல்லாத மாநகர பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்திடவும், காவிரி குடிநீர் வினியோகம் முறையாக தூயநீராய் வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதான சாலைகளை உடனடிய அமைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாநகரம் முழுவதும் உள்ள சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் நாய், பன்றி, மாடு போன்ற விலங்குகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. உடனடியாக இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.