32 விழுக்காடு பாஜக கூட்டணி வாக்கில் மோடி பிரதமர் ஆனார் என்றால் அது ஜனநாயகப் படுகொலையன்றி வேறென்ன? அதே ஜனநாயகப் படுகொலையைத்தான் இப்போது கர்நாடகத்திலும் நடத்திக்கொண்டிருக்கிறது மோடி அரசு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் போலி, மோசடி தேர்தல்வழி மக்களாட்சியில் காவிரி உள்பட எந்தப் பிரச்சனையிலுமே நியாயம், நீதி நிலைபெறுவதெப்படி? இந்தக் கேள்வியை முன்வைப்பதோடு, இந்தப் போலியான, மோசடியான தேர்தல் முறையை ஒழித்து, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை ஏற்படுத்த வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
ஜனநாயகத்தை தேர்தலே படுகொலை செய்வதுவா மக்களாட்சி? கர்நாடகத் தேர்தலே இதற்கு கண்கண்ட சாட்சி. 38 விழுக்காடு காங்கிரஸ் வாக்கிற்கு 78 இடங்கள்; 36 விழுக்காடு பாஜக வாக்கிற்கு 104 இடங்கள்; இது தேர்தலே செய்த ஜனநாயகப் படுகொலை. காங்கிரசுக்கும் மஜதவுக்குமான 115 எம்எல்ஏக்களைத் தவிர்த்து பாஜகவின் 104 எம்எல்ஏக்களை ஆட்சி அமைக்கச் சொன்னது ஆளுநர் செய்த ஜனநாயகப் படுகொலை.
காங்கிரஸ்-மஜத இதனை உச்ச நீதிமன்றத்தில் முறையிட, அது, நாளை காலை 10.30 மணிக்கு விசாரிப்போம் என்று சொல்லி, இன்று காலை 9 மணிக்கே பாஜகவை பதவியேற்கச் சொன்னது ஜனநாயகத்தோடு நீதியையும் சேர்த்தே செய்த படுகொலை. இத்தகைய ஒரு தேர்தல் முறையால் உண்டான போலி, மோசடி ஜனநாயகம் மற்றும் மக்களாட்சியில் காவிரி உள்பட எந்தப் பிரச்சனையிலுமே நியாயம், நீதி நிலைபெறுவதெப்படி?
இந்தக் கேள்வியை முன்வைப்பதோடு, இந்தப் போலியான, மோசடியான தேர்தல் முறையை ஒழித்து, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்களும் உண்மையான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும் முன்எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.