ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஓசூர் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டு காலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இதில், விரைந்து நடவடிக்கை எடுத்து 7 பேரை விடுவிக்க ஆளுநரை வலியுறுத்தும் விதமாக பிப்ரவரி 28-ம் தேதி ஓசூர் ராம்நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் தேசிய விடுதலை இயக்கம் திட்டமிட்டது. ஆனால், ஓசூர் காவல்நிலையம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ் தேசிய விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹரிபிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்பாட்டத்தின் போது, தமிழக ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்புவார்கள் என்பதால் ஆர்பாட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்க வலியுறுத்துவோமே தவிர அவருக்கு எதிராக கோஷம் போட மாட்டோம் என மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஓசூர் டவுண் காவல்நிலையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.