Skip to main content

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை... ஆட்சிக்கு வந்ததும் உடனடி நடவடிக்கை!!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

Demand made three years ago ... Immediate action after coming to power

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் ஏழ்மை நிலையில் வசிக்கும் செல்வராஜ் என்ற பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணையினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். அதன்பின் பத்திரிகையாளரிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்திவருகிறார்.

 

அந்த வகையில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் வீடு இல்லாத, ஏழ்மை நிலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுவருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது, செல்வராஜ் என்பவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் தகரத்தால் அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஏழ்மையில் வசித்து வருவதைக் காண முடிந்தது. தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டித் தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.

 

கடந்த ஆட்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காரணத்தால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற இயலவில்லை. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் கோரிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கு அரசின் திட்டத்தின்கீழ் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். மாவட்ட ஆட்சித்தலைவரும் உடனடியாக இம்மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் அரசு ஏழை, எளிய மக்களுக்காகச் செயல்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாமல் ஏழ்மையில் வாழும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக முழு முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட கலெக்டர் விசாகன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி உள்பட அதிகாரிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்