டெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பம்பு செட் மூலம் ஆங்காங்கே நடவு செய்யப்பட்டிருந்த குருவை சாகுபடி அறுவடைக்கு வந்தும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது. குறுவை சாகுபடியும் பொய்த்துவிட்டது. பம்புசெட் வைத்திருக்கும் பெரும் விவசாயிகள் மட்டுமே நிலத்தடி நீரைக்கொண்டு குறைந்த அளவில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கும் இடையே குறுவை சாகுபடியை செய்து அறுவடைக்கு காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் பெய்து வரும் கன மழையால் அறுவடை பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என கலக்கம் அடைந்துள்ளனர் விவசாயிகள்.
நெற்கதிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களும் மழையில் நனைந்து பயிர்கள் சேதம் அடைவதால், அதை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலையும் உருவாகிவிட்டது என்கிறார்கள் விவசாயிகள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி, அதோடு மின்வெட்டு, இரண்டையும் சமாளித்து, இரவு,பகல் தூக்கத்தை இழந்து விளைவித்தோம், அறுவடை நேரத்தில் இப்படி மழை பேய்து பயிர்கள் நாசமாக்கிடுச்சி, ஒருபுறம் மழை தேவையும் இருக்கு, மற்றொரு புறம் அழிக்கிறது. கடந்த மாதம் ஒரு கட் வைக்கோல் 110 ரூபாய் இன்று முப்பது ரூபாயாக சரிந்து விட்டது. இருபது மேனி வரும் விளைச்சல் தற்போது 10 மேனியாவது கிடைத்தாலே போதும்ங்கிற நிலமையாகிடுச்சி, விளைச்சல் பூறாவும் சாய்ந்து தண்ணீர் கோத்து முளைக்கத்துவங்கிடுச்சி, வாய்க்கால், ஆறுகள் தூர்வாராமல் போனதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் பாழாகிறது" என்கிறார்கள்.