'இந்திய விவசாயிகளை கார்ப்பரேட்களுக்கு அடகு வைக்கும் கறுப்புச் சட்டங்களை ரத்து செய்!' என்ற முழக்கங்களோடு தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகிறது. ஆனால், இந்தச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சமாதானம் பேசி போராடும் விவசாயிகளை வீட்டுக்கு அனுப்பும் மத்திய அரசின்முயற்சி பலனளிக்கவில்லை.
இதுவரை தங்களின் சொந்த ஊர்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது டெல்லி நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். இன்னும் சில நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லியில் கொடிப்பிடிக்கப் போகிறார்கள். டெல்லிக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல அந்தந்த ஊர்களில் போராட்டங்களை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில்தான், தமிழகத்தில் இருந்து டெல்டா இளம் விவசாயிகள் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) கடந்த இரண்டு வருடங்களாக, டெல்டா மாவட்டங்களில் பல வருடங்களாக மராமத்துச் செய்யப்படாத நீர்நிலைகளைத் தூர்வாரி, தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த நிமல்ராகவன், நவீன் ஆகிய இளம் விவசாயிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இணைந்து போராடச் சென்று தமிழில் எழுதிய பதாகைகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நிமல்ராகவன் கூறும்போது, விவசாயம் காக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கைஃபா உழைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது நமக்காக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதனால், நாங்களும் வந்தோம். போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் எங்களைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்றார்கள். முதல் நாளில் இருந்த அதே உற்சாகத்தோடு இப்பொழுதும் போராட்டம் தொடர்கிறது. பணக்கார விவசாயிகள் மட்டுமல்ல, சாதாரண விவசாயிகளும் விவசாயப் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகள் எனப் பாகுபாடின்றி கலந்துகொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் விவசாயிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், மட்டுமே வீட்டுக்குப் போவார்கள் இல்லை என்றால் எத்தனை மாதங்கள் ஆனாலும் போராட்டக் களத்திலேயே நிற்பார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தப் போராட்டத்தில், டெல்டா விவசாயிகளாக நாங்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
போராட்டங்களை முடக்க நினைக்காமல் விவசாயிகளைக் காப்பாற்ற அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.