தமிழ்நாட்டில் 3 கோடியே 10 லட்சம் மின் இணைப்புதாரர்கள் உள்ளனர். மின்கட்டணம் தொடர்பான சந்தேகம், புதிய மின் இணைப்பு, லோ ஓல்டேஜ், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்ட புகார்கள் தொிவிக்கவும், தகவல்கள் பெற்றிடவும் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மையத்திற்கு 94987 94987 என்ற பிரத்யேகமான செல்போன் வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தும் தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். 24 மணி நேர சேவை நடைபெறும் இம்மையத்தில் 195 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வாட்ஸ்அப் வாயிலாக உடனடியாக சென்று விடும். இந்த மின்னகத்தினை இன்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திடீர் ஆய்வு செய்தார். மின் நுகர்வோர் தொடர்பு கொள்ளும் போது அங்கு பணிபுரிபவர்கள் எவ்வாறு பொறுமையுடன் பதிலளிக்கிறார்கள். தகவல் பரிமாற்றம், சரிசெய்யப்பட்ட பின்பு தொடர்பு கொண்டவருக்கு தகவல் அளித்தல் போன்ற செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மேலும் சிறப்பாக செயல்பட அங்குள்ளவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.