குடியரசு தினத்திற்காக டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்கள் எனும் கருப்பொருளில் அலங்கார ஊர்தியை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஊர்தி தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் காட்சி படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்கும் அந்த ஊர்தி அதன் பிறகு தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என அறிவித்தார்.
அதன்படி கடந்த 26ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற அணிவகுப்பில் மத்திய அரசு நிராகரித்த அந்த அணிவகுப்பு வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த அலங்கார ஊர்தியில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி., வீரபாண்டிய கட்ட பொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து அது மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி மன்னார்புரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பழனியாண்டி மற்றும் பொதுமக்கள் இன்று பார்வையிட்டனர்.