கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள குறிஞ்சிகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(27). இவர், உளுந்தூர்பேட்டை 10வது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணிசெய்து வந்துள்ளார். இவர் கடந்த 1ஆம் தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்து காவலர்கள் செல்வகுமாரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது பெற்றோர், கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகாரில், அவர்களது மகன் செல்வகுமார் கடந்த 4 ஆண்டுகளாக காவல்துறையில் பணியில் இருந்து வந்தவர். தங்கள் ஊருக்கு அருகிலுள்ள பெரிய கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் அனிதா(37), அப்பகுதியில் பல பேருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருகிறார். அவரிடம் குடும்ப செலவிற்காக செல்வகுமார் ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஐந்து லட்ச ரூபாய் பணம் அதற்குரிய வட்டியையும் சேர்த்து அனிதாவிடம் கொடுத்துள்ளார்.
அதில் வட்டித் தொகையில் சிறிதளவு பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சில மாதங்களில் திருப்பித் தருவதாக செல்வகுமார் கூறினார். அதற்கு அனிதா வாய்மொழியாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எங்கள் மகனிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். அதை வைத்துக்கொண்டு 12 லட்ச ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் இந்த வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளதை பூர்த்தி செய்து கோர்ட்டில் தாக்கல் செய்து உன்னிடமிருந்து 12 லட்சத்தை என்னால் வாங்க முடியும். நீதிமன்றம் மூலம் உன்னை வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
அவரது மிரட்டலுக்கு பயந்து மன உளைச்சலில் இருந்து வந்த எங்கள் மகன், கடந்த ஒன்றாம் தேதி அனிதா குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்வதற்காக சென்றவர், விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அங்கிருந்த காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கந்துவட்டி கொடுமையால் எங்கள் மகனை இழந்து தவிக்கிறோம்.. எனவே, எங்கள் மகன் சாவுக்கு காரணமான கந்து வட்டி அனிதா மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து புதுதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அனிதாவை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.