Skip to main content

“இ.பி.எஸ்.ஸுக்கு விலக்கு அளிப்பதில் ஆட்சேபம் இல்லை” - தயாநிதி மாறன் தரப்பு பதில்!

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
Dayanidhi Maran side response for No objection to exempting EPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படிச் செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து  இது தொடர்பான வழக்கு  எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது  அவர் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

Dayanidhi Maran side response for No objection to exempting EPS

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (19.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் எடப்பாடி பழனிசாமி வழக்கில் இருந்து ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க ஆட்சேபம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் நீதிபதி, “இந்த வழக்கைத் தொடர்ந்த தயாநிதி மாறன் ஏன் நீதிமன்றத்திற்கு வரவில்லை” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தயாநிதி மாறன் தரப்பில், “அடுத்த முறை தயாநிதி மாறன் நேரில் ஆஜராகுவார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி இந்த வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்