கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்த தம்பதி வினோத்- சசிகலா (வயது 34). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி வரோகா (வயது 4), விஜயஸ்ரீ (3 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தனர். கடந்த 2018- ஆம் ஆண்டு விஜயஸ்ரீ பிறந்தது முதலே சசிகலாவுக்கு எது சாப்பிட்டாலும், வாந்தி வந்து கொண்டே இருக்குமாம். இதற்காக பல்வேறு இடங்களில் சசிகலாவிற்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லையாம். எனவே, அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தான் தற்கொலை செய்து கொண்டால் தனது குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணியவர், குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தானும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி அன்று இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து கொலை செய்த சசிகலா பின்னர் தூக்கிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மாமியார் விஜயா அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் இன்று (19/02/2022) தீர்ப்பு வழங்கினார். அதில், சசிகலாவிற்கு குழந்தைகளைக் கொன்ற குற்றத்திற்காக, ஒரு கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 2,000 அபராதம் விதித்ததோடு, ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சசிகலா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.