Skip to main content

தாய் கண்ணெதிரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகள்! 

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

The daughter who was swept away in the flood before the eyes of the mother!
                                                        மாதிரி படம்  

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் 10 வயது சைலத்மீரா. அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மகாலட்சுமியின் தந்தை வள்ளிக்கண்ணு இறந்ததையடுத்து, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தனது பிறந்த ஊரான ஏனாதிமங்கலத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். 

 

இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன. அப்போது மகாலட்சுமி, அவரது மகள் சைலத் மீரா, இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த உறவினரின் பெண் ஒருவர் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளத்தில் சைலத் மீரா அடித்துச் செல்லப்பட்டார். 

 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மகாலட்சுமி மற்றும் அருகில் இருந்தவர்கள் கதறி அழுது சத்தம் போட்டனர். இவர்களது கதறல் சத்தத்தைக் கேட்டு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த ஆண்கள் ஓடிசென்று ஆற்றில் இறங்கி தேடியுள்ளனர். இந்தத் தகவல் திருவெண்ணைநல்லூர் காவல்துறையினருக்கு  தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்களுடன் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரமாக ஆற்று வெள்ளத்தில் தேடி பிற்பகல் 4 மணி அளவில் சிறுமியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

அதேபோன்று சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது மாமனார் ஊரான சிறுவாடி கிராமத்திற்கு விருந்திற்கு வந்தவர், செஞ்சிக்கு சென்று மீண்டும் தனது மாமனார் ஊருக்கு திரும்பி வரும்போது ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை கடக்கும்போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இவரை தேடும் பணியில் மேல்மலையனூர் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாள் தேடுதலுக்குப் பிறகு சிவகுமாரின் உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களும் விழுப்புரம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்