ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட குழந்தைகள் நிலமையமான அங்கன் வாடிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. அத்திட்டத்தி்ன கீழ் நெல்லையின் ஆயுதப்படை மைதானம் அருகே அங்கன் வாடிமையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பான பணியாளராக செல்வராணியும், உதவியாளராக ரேவதி என்பவரும் பணியிலிருக்கின்றனர்.
பொதுவாக சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளவர்களின் பிள்ளைகள் தான் இது போன்ற அங்கன் வாடிமையத்தில் சேர்ந்து பயின்றுவருவது மரபு.
வழக்கப்படி தரையிலமர்ந்து தான் குழந்தைகள் பயில்கின்றனர்.
இதில் ஆச்சர்யம் மட்டுமல்ல, கேட்பவர்களின் புருவங்கள் உயருமளவுக்கு விஷயம் என்னவெனில் இந்த மையத்தில் பயில்கிற 20 குழந்தைகளோடு குழந்தையாக நெல்லை கலெக்டர் ஷில்பாவின் இளைய மகளான இரண்டரை வயது கீதாஞ்சலியும் கல்வி பயின்று வருவது தான். ஒரு மாவட்ட நிர்வாகத்தின் தலைமை அதிகாரி தன் மகளை இங்கு ஆரம்பகல்விக்காக சேர்த்து தான் கவனிக்கத்தக்கது.
இந்த மையத்தில் காலை மதியம், இரண்டு வேளைகளில் வாரநாட்களில் வித விதமான உணவுகள் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன, அவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் பொருட்டு படத்துடன் கூடிய பாடம் நடத்தப்படுவதால் கீதாஞ்சலி உட்பட அனைத்து குழந்தைகளும் ஆர்வமுடன் பயில்கின்றனர்.
கலெக்டரின் முகாம் அலுவலக ஊழியர்கள் தினசரி காலை கீதாஞ்சலியை அங்கே கொண்டு வந்து விட்டு விட்டு, மாலையில் திரும்ப அழைத்துச் செல்கின்றனர்.
கலெக்டரின் மகள் உட்பட அனைத்து குழந்தைகளும் குறித்த நேரத்திற்கு வருகிறார்கள். கற்றுத் தரப்படுகிற முன் பருவக் கல்வியை ஆர்வமுடன் படிக்கிறார்கள். என்கிறார் பணியாளர் செல்வராணி.
நான் சென்னையிலிருக்கும் போது கூட என் மகளை அங்குள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் தான் ஆரம்பக்கல்வியில் சேர்த்தேன் அதே முறையில் ஆரம்பகல்விக்காக தான் இங்கே அங்கன் வாடிக்கு அனுப்பியுள்ளேன் என்றார் கலெக்டர் ஷில்பா சாதாரணமாக.