திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளி கிணறு உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கும், திறந்தவெளி கிணற்றிற்கும் 15 அடி தூரம் தான் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.
இது தவிர அங்கன்வாடி பின்புறம் உள்ள தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி கிணற்றுக்கு ஒருபுறம் இரும்பு வலை போட்டு தடுப்பு அமைத்துள்ளனர். அந்த தடுப்பு வலையை முறையாக அமைக்காததால் அவ்வழியே நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கிணற்றின் உள்ளே விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளனர். மேலும் அந்த சாலை வழியாக செல்லும் குழந்தைகளும், பள்ளி மாணவர்களும் கிணற்றுக்குள் விழுந்துவிடும் நிலை உள்ளது.
மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து எம்.ஜி.ஆர். நகரில் உள்ள திறந்தவெளி கிணற்றிக்கு மூடி அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுப்புலெட்சுமி மற்றும் மகேஸ்வரி கூறுகையில் "அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளி கிணறு இருப்பதால் தினசரி பெற்றோர்கள் தங்கள் பிள்ளை கிணற்றிற்குள் விழுந்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அங்கன்வாடி மைத்திற்கு அனுப்புகின்றனர்".
மேற்குப்புறம் உள்ள கிணற்றில் ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை கொட்டுவதற்காக தடுப்பு வலையை எடுத்துள்ளது. இரண்டு கிணற்றிற்கும் முறையாக தடுப்புச்சுவர் அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று கோரிக்கைவிடுத்தார்கள்!