கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் பாதளசாக்கடைத் திட்டத்துக்காக நகரத்திலுள்ள அனைத்துச் சாலைகளும் தோண்டப்பட்டு பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த சில இடங்களில் உள்ள சாலைகளை புதிய சாலையாக போட்டுள்ளனர்.
இதில் புதிய சாலைகள் போடாத இடங்களில் மேடு, பள்ளங்களாக உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் மேடு தெரியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் விழுந்து எழுந்து செல்கிறார்கள். சாலைகளில் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரில் தில்லை நகர். கோவிந்தசாமி தெரு, சுவாதி நகா், அம்பேத்கா் நகா், திடீா்குப்பம், மன்னார்குடி தெரு, காரியபெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணியன் தெரு, தில்லை நகா், வேங்கான் தெரு, கீழபுத்துத் தெரு, மீனவா் காலனி, பறங்கித்தோட்டம், நந்தவனம், பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மேடு பள்ளமான சாலைகளில் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும் தில்லை நகரில் உள்ள வீனஸ் மெட்ரிக் பள்ளிக்குச் செல்லும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சுப்பிரமணியன் தெரு, கீழப்புதுத் தெரு, கோவிந்தசாமி தெருக்கள் வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மழைநேரத்தில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நிர்மலா பள்ளிக்கு சின்னமார்கெட் பகுதி சாலைகள் வழியாக செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதேபோல் அவதி அடைந்து செல்கிறார்கள்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பினர் என்.கலியமூர்த்தி "சிதம்பரம் நகரத்தில் பாதிக்கு மேற்பட்ட சாலைகள் பாதள சாக்கடை திட்டபணிகளுக்கு தோண்டபட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளை உடனே போடவேண்டும் என்று வரும் 4-ந்தேதி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் இதுகுறித்து பொதுமக்களுடன் சென்று மனுகொடுக்கவுள்ளோம். இதிலும் சாலை அமைக்க தாமதம் ஏற்பட்டால் சாலை அமைக்காத பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்" என்று கூறினார்.
நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா "நிதி கிடைத்த அளவிற்கு சில சாலைகளை புதியதாக போட்டுள்ளோம். மற்ற சாலைகள் போடுவதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் மற்ற சாலைகளையும் சீரமைக்கப்படும்" என்றார். நகராட்சி பொறியாளர் மகாதேவன் ”காரியபெருமாள் கோவில் தெரு, கோவிந்தசாமி தெரு, கொத்தங்குடி தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள பள்ளங்களை ஒப்பந்தகாரர்களின் உதவியுடன் அவ்வபோது சரி செய்து வருகிறேன். விரைவில் அனைத்து இடங்களிலும் புதிய சாலைகள் அமைக்கப்டும்" என்றார்.