நாகப்பட்டினத்தில் போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலைகள் முழுவதும், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக மாறியிருக்கிறது. சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பெரும்மழையால் நகரத்தில் உள்ள முக்கியமான சாலைகள், போக்குவரத்து நிறம்ப காணப்படும் சாலைகள் முழுவதும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
36 வார்டுகளைக்கொண்ட நாகை நகராட்சி சாலைகளும் பராமரிப்பு இல்லாமலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், மழைநீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி பல்வேறு நோய்களை உருவாக்கிவருகிறது. அதோடு கனமான வாகனங்களும் செல்வதால் சிதிலமடைந்து சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
" நாகை பகுதியின் சாலைப் போக்குவரத்து என்பது, பொதுமக்களுக்கு சவாலாக மாறியுள்ளது. போக்குவரத்து நிறைந்த நாகை பழைய பேருந்து நிலையம், நீலாயதாட்சியம்மன் கோயில் தெற்குவீதி, மேலவீதி, புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆஃபீஸ் ரோடு உள்ளிட்ட சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்." என்கிறார் சமுக ஆர்வளரும், முன்னாள் அக்கரைப்பேட்டை ஊ.ம.தலைவருமான.மனோகரன்.
"சாதாரணமா இருசக்கர வாகனங்களில் செல்வோர்களில் பெரும்பாலானோர் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமல் போனதால், தண்ணீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்குகிறது. இதனால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்படுகின்றன. மழைநீர் வடிகால்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். " என்கிறார்கள் வர்த்தக சங்கத்தினர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், பூம்புகார், சீர்காழி, வேதாரண்யம், மயிலாடுதுறை ஆகிய 4 சட்டமன்றத்தொகுதிகள் அதிமுக வசமே இருக்கிறது, கீழ்வேளூர் தொகுதியை தவிர மீதமுள்ள நாகை தொகுதியும் அதிமுக ஆதரவு கட்சியான ம.ஜ.கவிடம் உள்ளது. கூட்டனி கட்சியாக இருந்தாலும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் வேண்டுமென்றே நாகை தொகுதியை புறக்கணிக்கிறார்," என்கிறார் ம.ஜ.க பிரமுகர் ஒருவர்.