விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் 23 வயது ஜெயவர்த்தன். அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது ராஜசேகர். பிடெக் பட்டதாரியான இவர், மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு நண்பர்களான இவர்கள் இருவரும் பிளாஸ்டிக் பேரல்கள் மூலம் படகு தயாரித்து அந்தப் படகில் அமர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியின் மையப் பகுதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென பிளாஸ்டிக் பேரல் படகு கவிழ்ந்துள்ளது. அதில் இருவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். நீந்தி கரைக்கு வருவதற்கு இருவரும் கடும் முயற்சி செய்தனர். இதில் ஜெயவர்தன், கரைக்குத் திரும்பி வந்துள்ளார். ராஜசேகர் தண்ணீரில் நீந்த முடியாமல் நீரிலேயே மூழ்கிவிட்டார்.
தகவலறிந்த ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி, தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர், வானூர் தீயணைப்புத்துறையினர், ஏரியில் மூழ்கிய ராஜசேகரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று திண்டிவனத்தை அடுத்த அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மனைவி ஜெயஸ்ரீ, இவர்களது ஒன்றரை வயதுக் குழந்தை கனிஷ்கா. கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை கனிஷ்காவை அழைத்துக் கொண்டு வெங்கணூரில் உள்ள தனது தந்தை சேகர் வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். சேகர், அப்பகுதியில் ஹலோ பிளாக் கல்லை வைத்து சுவர் அமைத்து அதற்கு மேல் சிமெண்ட் ஷீட் போடப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் ஜெயஸ்ரீ தன் குழந்தை கனிஷ்கா உடன் தங்கியுள்ளார். மழை காரணமாக அந்த வீட்டின் சுவர் விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்கா மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை கனிஷ்கா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பெரியதச்சூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மழை காரணமாக உயிரிழப்புகள் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.