வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், 11ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, புதுவை ஆகிய பகுதிகளிலும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த ஓராண்டுக்கு முன்பு 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது.
தொடர் மழையால் தளவானூர் தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அதன் வழியாக தண்ணீர் வெளியேறிவருகிறது. உடைப்பு ஏற்பட்ட தடுப்பணை பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்துவருகிறார். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது. தற்போது மதுராந்தகம் ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவான 23.3 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.