டிசம்பர் 4- ஆம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 4- ஆம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீன்பிடி படகுகளின் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள தமிழநாட்டு மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்குமாறு, தொடர்புடைய மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நீர்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மின்கம்பிகள், மின்மாற்றிகள், தெரு விளக்கு கம்பிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை” இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.