வாடிக்கையாளரிடம் ரூபாய் 36 லட்சத்தை மோசடி செய்த வங்கி மேலாளர் தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அல்லா ஹையர். இவர் தனக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்று பல லட்சம் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அல்லா ஹையர் வழக்கம் போல் காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்லும்போது அதே தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட பிரபல தனியார் வங்கியின் மேலாளராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வந்துள்ளார்.
அல்லா ஹையரும், பாலகிருஷ்ணனும் நெருங்கி பழகி வந்த நிலையில் அல்லா ஹையர் தன்னுடைய குடும்ப கஷ்டங்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். நான் இப்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். என்னுடைய நிலத்தை விற்பனை செய்த பணத்தை வைத்து என்ன தொழில் தொடங்கலாம் என்று பாலகிருஷ்ணனிடம் யோசனை கேட்டுள்ளார்.
அப்போது, நிலம் விற்ற பணத்தை தங்களது வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் ஆசை வார்த்தையை நம்பிய அல்லா ஹையர், அவரிடம் சுமார் ரூ. 36 லட்சம் பணத்தை கொடுத்ததுடன் 50 பவுன் தங்க காசுகளையும் ஒப்படைத்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல, அல்லா ஹையருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல், வாங்கிய 36 லட்சம் பணத்தையும் 50 பவுன் தங்க காசுகளையும் திருப்பித் தராமல் மேலாளர் பாலகிருஷ்ணன் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அல்லா ஹையர், பாலகிருஷ்ணன் மீது சிவகங்கை எஸ்.பி செந்தில்குமாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.