“குடும்பத்தோடு கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டது ஒரு தப்பா?” -விருதுநகர் தொழிலதிபர் ஒருவர் கேட்கும் இந்தக் கேள்விக்கு “ஆமா..தப்புத்தான்..” என்கிறார்கள், அந்த ஊர் பிரமுகர்கள் சிலர்.
“இது தனிநபர் சார்ந்த பிரச்சனை அல்ல.. ஊரடங்கு மீறல் விவகாரம்..” என்று கூறினார், விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் 14 பேரில் ஒருவர்.
விவகாரம் இதுதான் -
விருதுநகர் மாரியம்மன் பொங்கல் என்பது தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவிழா ஆகும். ஊரடங்கினால், இவ்விழா சம்பிரதாயமாக நடந்து முடிந்தது. ஆனால், தெய்வ சன்னதியில் ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் சமம் என்ற ஆன்மீக கோட்பாடு, இங்கே மீறப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனும்கூட இவ்விழாவில் பங்கேற்பதில் முதலில் ஆர்வம் காட்டினார். பிறகு, ஊரடங்கு உத்தரவை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கோவில் பக்கமே அவர் வரவில்லை. ஆனால், தொழிலதிபர் முரளிக்கும் அவரது நண்பரான காவல்துறை அதிகாரிக்கும், பொங்கல் விழாவின்போது கோவில் கதவுகள் திறந்திருக்கிறது. இத்தனைக்கும் முரளி, மாரியம்மன் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கூட இல்லை. ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவை, தாங்கள் வழிபட்டு வந்த மாரியம்மனை, தரிசிக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்ற நிலையில், பணபலமும் அதிகார பலமும் கைகோர்த்து, கோவிலுக்குள் சென்றதை, ஊர்மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஆத்திரத்தை வாட்ஸ்-ஆப் மூலம் பரப்பி, விருதுநகரை சிலர் தகிக்க வைக்கின்றனர்.
நாம் தொழிலதிபர் முரளியிடம் பேசினோம்.
“தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் சாமி கும்பிட அழைத்தார். நான் வருவது சரியாக இருக்குமா? என்று கேட்டேன். கூட்டமாகத்தான் வரக்கூடாது, ஒருவர் ஒருவராக வரலாம் என்றார். என் மனைவியுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன். சிலர் சொல்வதுபோல், காவல்துறை அதிகாரி யாரும் என்னோடு கோவிலுக்கு வரவில்லை. என்னை சம்பந்தப்படுத்தி ஊருக்குள் பரபரப்பு ஏற்படுத்துவதை சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பொது விஷயத்தில், குறிப்பாக பொருட்காட்சி நடந்தபோதெல்லாம், கொள்ளை லாபம் பார்த்த ஒருவரது மோசடித்தனம் கண்டுபிடிக்கப்பட்டதால், அவருடைய பிழைப்புக்கு வழியில்லாமல் போனது. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்..’ என்று சவால் விட்டார். எனக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, எனது அலுவலகம் வரை சிலர் மூக்கை நுழைக்கின்றனர். நான் பொதுநலத்தோடு செயல்படுகிறேன். எனக்கெதிரான அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுயநலம் மட்டுமே உண்டு.” என்றார் வேதனையுடன்.
தனிப்பட்ட விஷயத்தை பொது விவகாரம் ஆக்கி, ‘கோவிலில் வர்க்க பேதம்’ என்று பக்தர்களின் பெயரால் ஊரை உசுப்பேற்றுவதெல்லாம், ஒரு தினுசான அரசியலாக அல்லவா இருக்கிறது!