கரோனா பரவலைத் தடுப்பதற்காக, பலசரக்கு கடைகளிலும், காய்கறி கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதிகாட்டும் தமிழக அரசு, கரோனா நிவாரணத்தொகை ரூ.1000-க்கான டோக்கன் பெறுவதற்காக ரேசன் கடைகளில் கூடும் மக்களை, அவர்கள் இஷ்டத்துக்கு விட்டுவிட்டது.
ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டமோ வட்டமோ போட்டு, அதில்தான் நிற்கவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் ரேசன் கடைகளில் நிற்கும் மக்களுக்கு கிடையாதென்றால், 21 நாள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, ‘கரோனாவை எதிர்த்து போரிடக்கூடிய முக்கியமான ஆயுதம் சமூகத்தில் இருந்து தனித்து இருப்பதுதான்..’ என்று உரையாற்றியதெல்லாம் அர்த்தமற்றதாக அல்லவா ஆகிவிடுகிறது?
மதுரை ரேசன் கடை ஒன்றில் ஒட்டியபடியே நின்ற மக்களிடம், ‘விழித்திரு.. தனித்திரு.. விலகி இரு.. என்று முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி டிவியில் கூறும் அறிவுரையை புறந்தள்ளிவிட்டு, சமூக விலகல் கட்டுப்பாட்டுக்கு எதிராக இப்படி நடந்துகொள்வது சரிதானா?’ என்று கேட்டபோது, “இந்த ஒருவாரமா ஒரு வருமானமும் இல்லை. இப்ப வாங்குற 1000 ரூபாய் டோக்கனுக்கு நாளை மறுநாள்தான் பணம் கொடுப்பாங்களாம். ரேசன் கடைக்கு இன்னைக்கு வந்திருக்கோம். நாளை மறுநாளும் வரணும். இப்படி ரெண்டு நாள், மக்களை வீட்டை விட்டு வெளிய வர வச்சிருக்காரே எடப்பாடி? அது மட்டும் சரியா?”
என்று திருப்பி கேட்டார்கள்.
கரோனா விஷயத்தில், மத்திய, மாநில அரசுகளைப் போலவே, பரபரப்பும் அவசரமும் மக்களைத் தொற்றியுள்ளது.