ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (12/02/2022) காலை 11.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், உணவகங்கள், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது, மழலையர் பள்ளிகளைத் திறப்பது ,அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறுகின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது குறித்த அறிவிப்பை இன்று மாலையோ அல்லது நாளையோ தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் பிப்ரவரி 15- ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியும் நிலையில், தற்போது முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.