நாடு முழுவதும் முழு ஊரடங்கினைப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மார்ச் 24ந்தேதி இரவு 12 மணிமுதல், தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு நீடிக்க இருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்வதில் நிறையவே சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும்.
பொதுவாக, வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்வது என்பது கெடுபிடிகளைக் கடந்தும் அத்தியாவசியமானதாக மாறுகிறது. இந்த மாதிரி நேரத்தில் நாம் மற்றும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லாமல், நடந்து கொள்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், பிரச்சனைகளைக் குறைக்க முடியும்.
ஒரே நபர் : குடும்பத்தில் ஒரு நபரைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க, அவரை மட்டுமே அனுப்ப வேண்டும். மற்றவர்கள் செல்லக்கூடாது.
ஒரே உடை : வெளியில் செல்லும் அந்த நபர், ஒவ்வொரு முறையும் ஒரே உடையை அணிந்துகொள்வது அவசியம். அணியும் உடை உடலை முழுவதுமாக மறைக்கும் விதமாக, நீளமானதாக இருப்பின் நல்லது. அந்த உடையோடு மற்ற உடைகளைக் கலக்கக்கூடாது.
ஒரே பணப்பை : இப்போதே இந்த நாட்களுக்குத் தேவையான பணத்தை தனியாகப் பிரித்து, தனி பணப்பையில் வைத்து விடவேண்டும். அதில் இருக்கும் பணம், பண அட்டைகள், சில்லரைகளை வீட்டில் மற்றவர்கள் எடுக்கக்கூடாது. மற்ற தேவைக்கான பணத்தோடு கலக்கக்கூடாது.
ஒரே துணிப்பை : ஒவ்வொரு முறை வெளியில் செல்லும்போதும், ஒரே துணிப்பையைக் கொண்டுசெல்ல வேண்டும். பைகளை மாற்றவேண்டாம்.
ஒரே வாகனம் : எப்போதும் ஒரே வாகனத்தையும், அதற்கான சாவியையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூட்டமாக செல்லக்கூடிய பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது.
ஒரே முறை : ஒருமுறை வெளியில் செல்வதற்கு முன்னர், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தீர்மானித்துவிட்டு கிளம்ப வேண்டும். அடிக்கடி செல்வது நமக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து விளைவிக்கலாம்.
செல்போனை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும். சில நாட்களுக்கு அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வெளியில் செல்லும் பணி முடிந்ததும் கூட்டம் சேராமல், உடனடியாக கிளம்பி வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.
கதவுகளைத் திறக்கும்போது வலதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருப்பின், கைப்பிடியை இடது கையால் திறக்கலாம். அல்லது முழங்கைகளைப் பயன்படுத்தலாம். வீட்டு அழைப்புமணி அழுத்தும்போதும் இதில் கவனம் வேண்டும்.
வெளியில் செல்பவர், வீட்டிற்குள் நுழைந்ததும் உடை, துணிப்பை, சாவி அனைத்தையும் தனிமைப் படுத்திவிட வேண்டும். உடனடியாக கைகள், முகம் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தமாகக் கழுவவேண்டும். அதற்கு முன் எந்தப் பொருளையும் தொடக்கூடாது. முடிந்தால் செல்போனை சானிடைசர் ஸ்ப்ரே கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். கூடுமானவரை செல்போன்களைத் தவிர்க்கலாம்.
மிக முக்கியமாக, நம்மால் வெளியில் செல்லாமல் இருக்க முடியாமல் போனாலும், குறைத்துக் கொள்வதும், கெடுபிடிகளைப் பின்பற்றுவதும் அத்தியாவசியம். நம் விழிப்புணர்வு, நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கும்.