திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று (17.12.2021) துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லும் பயணிகளின் ஆவணங்களைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வுசெய்தனர்.
அப்போது அவர் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது சலீம் என்பதும் இவர் மீது திருவாரூர் மாவட்ட மகளிர் காவல்துறையினர் வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் என இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானது தெரியவந்ததையடுத்து ஏர்போர்ட் காவல்துறையினர் திருவாரூர் மாவட்ட மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் திருச்சி வந்த காவலர்கள், முகமது சலீமை கைது செய்து அழைத்துச் சென்றனர்.