கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காராமணிக்குப்பம் சந்தை அருகே சிலர் கஞ்சா விற்பதாக பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு டூவீலரில் கையில் பெட்டியுடன் நின்றிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பெட்டியில் கஞ்சா இருந்ததை கையும் களவுமாக கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில், கடலூர் கேன் பேட்டைக்கு போலீசார் சென்று, அங்கு கஞ்சா வைத்திருந்தவர்களை கைது செய்தனர். மதுரையில் இருந்து கடலூர் கே. என். பேட்டைக்கு வந்து தங்கியுள்ள வேல்முருகன் என்பவர் கஞ்சாவை மொத்தமாக வெளியில் இருந்து வரவழைத்து கே. என். பேட்டையிலிருந்து கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி போன்ற மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது.
போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கடலூர் கே. என். பேட்டையை சேர்ந்த வேல்முருகன், திருப்பாப்புலியூர் முனுசாமி, நெல்லிக்குப்பம் அருகிலுள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த பிரதீப், ஆனந்தராஜ், விமல்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா, 1,12,000 ரூபாய் பணம், 5 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து பண்ருட்டி எஸ்.பி. பாபு பிரசாந்த், கைது செய்யப்பட்டவர்களிடம் கஞ்சா விற்பனையில் இன்னும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, வேறு எங்காவது கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா வியாபாரம் ரகசியமாக கொடிகட்டி பறந்து வருகின்றது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.