கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணிமுத்தாறு மற்றும் வெள்ளாற்றில் மணல் எடுப்பதை தொழிலாக கொண்டிருந்து வந்தனர். அதேசமயம் ஒரு ஆண்டுக்கு முன்பு மணல் குவாரி மூடப்பட்டதால் இவர்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க பல கட்ட போராட்டங்களை செய்தனர்.
இந்நிலையில் மணிமுத்தாறில் வி.குமாரமங்கலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகம் மாட்டு வண்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை லாரி குவாரிக்கு மணல் எடுக்க அனுமதி வழங்கியது. அதையடுத்து மாட்டுவண்டி மணல் குவாரிக்கு அனுமதி வழங்க கோரி பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் பல்வேறு மனுக்கள் அளித்தும் அனுமதி கிடைக்காததால் புதுக்கூரைப்பேட்டையில் உள்ள அய்யனார் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளிகள் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி அய்யனார் சாமியிடம் மனு அளித்தனர்.