கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் நமது நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் பிரசன்னகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் என்.சி.சி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து குடியரசு தின உரையாற்றிய பிரசன்னகுமார், "வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் என்.எல்.சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரி உற்பத்தி அளவை ஆண்டிற்கு 440 லட்சம் டன்னாகவும், அனல் மின் உற்பத்தி அளவானது மணிக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் புதுப்பிக்கவல்ல மின்னாற்றல் உற்பத்தி அளவானது மணிக்கு 60 லட்சத்து 39 ஆயிரம் யூனிட் என, ஆக மொத்தத்தில் மின் உற்பத்தி அளவானது 2030 ஆம் ஆண்டிற்குள் 17,171 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட உள்ளது. பழுப்பு நிலக்கரியிலிருந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் மெத்தனால் திரவம் தயாரிக்கும் திட்டம், நாள் ஒன்றுக்கு 290 டன் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரியிலிருந்து டீசல் உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கும் திட்டம் மற்றும் சுரங்க மேல் மண்ணை கட்டுமானத்திற்கு உதவும் மணலாக மாற்றுவதற்கு ஆண்டுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் டன் திறன் கொண்ட ஆலை உருவாக்கும் திட்டம் உள்ளது" என மூன்று புதிய திட்டங்களை அறிவித்தார்.
குடியரசு தின உரையில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலங்களை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது பற்றியும், உறுதியளித்தபடி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவது பற்றியும் எவ்வித அறிவிப்பும் வழங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.