கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்ட குமராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பாசன வாய்கால்களில் தூர்வாரமல் தூர்வாரியதாக ஆளும் கட்சியினர் முறைகேடு செய்துள்ளதை கண்டித்தும். 2016-17, 2017-18 ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து விடுபட்டவர்களுக்கு காப்பீடு தொகையை வழங்க வேண்டும், குமராட்சி வேளாண் அலுவலகத்திற்கு வரும் வேளாண் இடுபொருட்கள், உழவு கருவிகள், விதைகள் அரசு திட்டத்தின் கீழ் வர கூடிய மானியம் உள்ளிட்ட அனைத்தையும் ஏழை, எளிய, நடுத்தர, குத்தகை, போக்கியம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குமராட்சி வேளாண் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் குமராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்டத்துணைச்செயலாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் கற்பனைச்செல்வம், துணைச்செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து கோசங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து குமராட்சி வேளாண் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.