‘புரவி’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 6 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிபாடி, புவனகிரி, பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கிராமங்களைத் தீவுகளாக ஆக்கியுள்ளது. அதோடு வீராணம் ஏரியிலிருந்து ஏரியின் கரையின் பாதுகாப்பு கருதி 4 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் திருநாரையூர், சிறகிழந்த நல்லூர், கீழவன்னியூர், நடித்திட்டு, நந்திமங்கலம், பிள்ளையார், தாங்கல் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
இதே போன்று குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியிலிருந்து 12 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களும் இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மழை நீரோடு சேர்ந்து பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் சுமார் 2,000 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப்படி பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் ஆங்காங்கே அரசு அதிகாரிகள் உருவாக்கியுள்ள முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கான உணவு பாதுகாப்பு வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் அவர்கள் வாழ்விடங்களும் மழை நீர் சூழ்ந்து கொள்வதற்கு மிக முக்கிய காரணம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே ஆகும்.
அவைகளுக்கு வரும் நீர் வரத்து வாய்க்கால்கள் பெரும்பான்மையானவை ஆக்கிரமிக்கப்பட்டு அதற்கான அடையாளங்களே இல்லாத நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் கட்டிடங்களை உருவாக்கி விட்டனர். இதனால் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் மழைநீர் திக்குமுக்காடி கிராமங்களுக்குள் நகரங்களுக்குள் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலுக்குள்ளும் அதுவே ஒரு வழியை ஏற்படுத்திப் புகுந்துள்ளது. இதற்குக் காரணம் மழை அல்ல மனிதர்களே, மழைக்காலங்களில் அபரிதமான வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலப்பதற்கு என்றவாறு அனைத்துப் பகுதிகளிலும் வடிகால் வசதிகள் இருந்தன. அவை பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் அனைத்து தரப்பினரும் மழைக்காலத்தில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். உயர் நீதிமன்றமும் இதனை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளையும் குளங்களையும் நீர் வழித் தடங்களையும் நீர் வழி வடிகால் தடங்களையும் தமிழக அரசு புனரமைப்பு செய்ய வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்கவிடுவது கண் துடைப்புக்காக அவ்வப்போது சில ஏரிகளைக் குளங்களைச் சீரமைக்கப்பட்டதோடு முழுமையாகச் செய்யாதது தான் தற்போது வெள்ள நீரில் மக்களும் வீடுகளும் மிதப்பதற்குக் காரணம் இதற்கு நிரந்தர தீர்வு எப்போது தான் ஏற்படும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கடலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.