Skip to main content

இரட்டைக் கொலை வழக்கு... குற்றவாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனை!- கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

cuddalore district youths incident district court judgement

 

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலைய தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மகன்கள் வினோத்குமார் (21 வயது), சதீஷ்குமார் (19 வயது).  இதில் சதீஷ்குமார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆவர். 

 

கடந்த 21.05.2016 அன்று இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து, வெட்டிப் படுகொலை செய்தது. அதையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்களான லட்சுமணன் (40 வயது), கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டேவிட் தேவராஜ் (26 வயது), சதீஷ் (25 வயது), மேல் அழிஞ்சிப்பட்டு பாலமுருகன் (28 வயது) உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் கொலை சம்பவத்திற்கு முதல்நாள் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழியில் நிறுத்திய லட்சுமணன் 'ஏன் வேகமாகச் செல்கிறாய்' எனக் கேட்டு அங்கிருந்த பெண்கள் முன்பாக சதீஷ்குமாரை தாக்கியுள்ளார். இதனால் அவமானமடைந்த சதீஷ்குமார் தனது அண்ணனுடன் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார் என அஞ்சியுள்ளார் லட்சுமணன். இதனால் 10 பேர் கொண்ட கும்பலுடன் அண்ணன், தம்பி (வினோத்குமார் மற்றும் சதீஷ்குமார்) இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

 

இந்த இரட்டைக் கொலை வழக்கு கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே ஜாமீனில் வெளி வந்த லட்சுமணன், டேவிட்ராஜ், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் தலைமறைவாகினர். பின்னர் நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி, வேப்பூர் கோழிச் சந்தையில் பதுங்கியிருந்த லட்சுமணனையும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த இதர மூன்று பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

http://onelink.to/nknapp

 

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று (30/06/2020) முடிவடைந்து கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன், டேவிட் என்கிற தேவராஜ், பாலமுருகன், சௌந்தரராஜன், அருண்குமார், சதீஷ், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிபதி, கொலைகளை முன்னின்று நடத்திய லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, அனைவரும் ஏக தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார்.  

 

மேலும் லட்சமணனுக்கு 7,500 ரூபாயும், மற்ற அனைவருக்கும் 4,500 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்