நெல் அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையால் விவசாயிகள் வேதனை!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர், சக்கரமங்கலம் மற்றும் வல்லியம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் சாலை பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை பள்ளி மாணவர்கள் செல்வதற்கும், மூன்று கிராமங்களில் உள்ள 200- ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களின் பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கும் பிரதான சாலையாக அமைந்து வருகிறது.
இச்சாலை பணி தொடங்கப்பட்ட நாள் முதல், விரைந்து முடிக்காமல் பாதி வேலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை முழுவதும், பெயர்த்து விட்டதால், அவ்வழியாக சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல், மிகுந்த அவஸ்தை அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் சாலையில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுவதால், தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்படுவதால் இச்சாலையில் செல்வதற்கு அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இக்கிராம சாலையில் விவசாய விளைபொருட்கள் எதுவும் கொண்டு செல்ல முடியாத படி ஜல்லிகளை குவியல், குவியலாக சாலையின் நடுவே கொட்டி வைத்திருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நெல் இயந்திரங்கள், டிராக்டர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இச்சாலையில் எவ்வித அசாம்பாவிதங்களும் நடைபெறுவதற்குள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அறுவடை காலத்திற்கு முன்பே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.