ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடக் கோரி கடந்த மே 22ம் தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் எழுந்த கலவரம் மற்றும் துப்பாக்கிசூட்டின் விளைவாக, மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தவர் மரணமடைய பலியானவர்களின் எண்ணிக்கை 15ஐத் தொட்டது.
நிலம், நீர், காற்று ஆகியவனவற்றில் மாசைக் கலந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடிடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்தனர் அருகிலுள்ள அ.குமரெட்டியாபுரம் மக்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 99-ம் நாள் வரை அசையவில்லை அரசு. நமது கோரிக்கை நிறைவேற்றும் வரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இருப்போம் என புறப்பட்ட பொதுமக்கள் மீது தடியடி, கண்ணீர்புகைக் குண்டு வீசி கலவரத்தை துவக்கிய காவல்துறை பின்பு துப்பாக்கிச்சூடும் நடத்தியது. அன்றே 12 நபர்கள் இறக்க, மறு நாள் நடந்த துப்பாக்கிச்சூடில் ஒருவர் இறக்க பலி எண்ணிக்கை 13 ஆனது. இது போக, போலீசாரின் தடியடிக்குள் சிக்கியவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர். அதில் ஒருவரான ஒட்டப்பிடாரம் கீழமுடிமண் கிராமத்தை சார்ந்த ஜஸ்டின் கோமா நிலைக்கே சென்றுவிட்டார். இப்படியிருக்க அதற்கடுத்த நாட்களில் பரோலில் வெளிவந்த ஆயுள்தண்டனை கைதியான பரத் தூத்துக்குடி கலவரத்தின் போது தாக்கப்பட்டு, பரோல் முடிந்து சிறைக்கு சென்ற நிலையில் மரணமடைய இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆனது.
இவ்வேளையில், போலீசாரின் தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற தனியார் ஷிப்பிங் கம்பெனி ஊழியரான கீழமுடிமண் ஜஸ்டின் சிகிச்சை பலனிளிக்காமல் திங்கட்கிழமையன்று இறந்துவிட்டார். இதனால் தூத்துக்குடி கலவரத்தின் போது ஏற்பட்ட உயிர்ப்பலியின் எண்ணிக்கை 15ஐத் தொட்டுள்ளது. இதனால் ஒட்டப்பிடாரம் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.