கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் நேற்று முன்தினம் (09/12/2020) இரவு, கோவிந்தசாமி என்பவரின் மனைவி ரத்தினம்பாள் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவர்களின் உடலை மணிமுத்தாறு நதிக்கரையில் அடக்கம் செய்வது வழக்கமாகும்.
ஆனால் தற்போது பெய்த கன மழையால், மணிமுத்தாறு நதிக்கரைக்கு முன்பு அமைந்துள்ள கருவேப்பிலங்குறிச்சி ஓடையில் சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்கிராம மக்கள் அந்த ஓடையைக் கடந்து சென்று தான், இறந்தவர்களின் உடலை மணிமுத்தாற்றங்கரையில் அடக்கம் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், வேகமாக செல்லும் ஓடையில் இரு கரையும் சேர்கின்ற இடத்தில், கயிறுகள் கட்டி கொண்டு, நான்கு சக்கர வாகனத்தில் பயன்படுத்தப்படும் மிதக்கும் தன்மை கொண்ட டியுபினை மூங்கில் கழியில் கட்டி இறந்தவரின் உடலை, அதன் மேல் வைத்து, ஆபத்தான முறையில் ஓடையைக் கடந்து, மணிமுத்தாறு நதிக்கரையில் அடக்கம் செய்தனர்.
மேலப்பாளையூர் கிராமத்தில், ஓடையைக் கடந்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்காகவும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவும் மேம்பாலம் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் தற்போது வரை மேம்பாலம் அமைக்கததால், அக்கிராம மக்கள் மழைக்காலங்களில் விவசாயம் செய்ய முடியாமலும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமலும் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.