கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், எரிபொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி சேவைகள் இயங்கவும், பத்திரப்பதிவுத்துறை இயக்கத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூகநல தாசில்தார் ரவிச்சந்திரன், அரசு தலைமை மருத்துவர் செல்வேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், இராமநத்தம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற சார் ஆட்சியர் பிரவீன்குமார், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் அதிக கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேபோல் இராமநத்தத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், கடலூர்- பெரம்பலூர் மாவட்ட எல்லையை இணைக்கும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற்று வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெண்ணாடம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், தனியார் மற்றும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டார். பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கியில் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் பணிபுரிந்த எழுத்தர் வெங்கடேசன் என்பவர் முகக் கவசம் அணியாமல் பணி செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சார் ஆட்சியர் பிரவீன்குமார் கரோனா குறித்த விழிப்புணர்வை அவரிடம் ஏற்படுத்தினார்.
மேலும் அவரை பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பணி காலத்தின்போது பொதுமக்களுக்கு கரோனா வருவதற்குக் காரணமாகப் பணி செய்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தினார். அதையடுத்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.