கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி பாபு பிரசாந்த் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (23/06/2020) கடலூர் மெயின் ரோட்டில் உள்ள மளிகைக் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 11,220 ஹான்ஸ், பான்மசாலா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள அவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், பண்ருட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த சுஜாராம் (47), சாம்பாராம் (27) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் நேற்று (24/06/2020) பண்ருட்டியில் ஹான்ஸ் விற்பனை செய்த முக்கிய வியாபாரிகள் வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த ரகுபதி (41), ஜவஹர் தெருவைச் சேர்ந்த டோலாராம் (25), சீனு (42) ஆகிய மூன்று பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 57,780 ரூபாய் மதிப்புள்ள 5,778 ஹான்ஸ் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளி மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் பண்ருட்டிக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட மூன்று மூட்டை பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து பலரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பண்ருட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.