கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொம்பாடிகுப்பம், ஊத்தங்கால், பொன்னாலகரம் மற்றும் கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சுற்றி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் மணல்மேடு அமைந்துள்ளது. இம்மணல் மேடுகளில் இருந்து மழைக் காலங்களில் ஏற்படும் மண்சரிவினால், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் வயல்களில், முற்றிலுமாக மணல் சூழ்ந்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரியிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். அதையடுத்து, பொன்னாலகரம் கிராமத்தில் அமைந்துள்ள என்.எல்.சி மணல்மேட்டில் இருந்து வெளிவரும் மழைநீர் செல்லும் வடிகால் வாய்க்கால் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தவர், அதற்கான தீர்வுகள் குறித்து என்.எல்.சி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, "என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து, ஏற்படும் மண் சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தாசில்தார், சார் ஆட்சியர் தலைமையில் தற்போது வரை 8 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அதன் அடிப்படையில், கடந்த நான்கு வருடமாக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கான, நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து வெளிவரும் மழைநீரை விவசாயம் செல்லும் பகுதிக்குச் செல்லவிடமால், தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கம்மாபுரம் பகுதியில் ஏற்படும் மண் சரிவினால், மணல் மேட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், எவ்விதத் தடங்களின்றி செல்வதற்கான வழிகளைச் சரி செய்துள்ளனர். அடைப்பு ஏற்பட்டாலோ? வாய்க்கால் உடைபட்டாலோ? உடனடியாக நிவர்த்தி செய்வதற்காக ஜே.சி.பி இயந்திரம், மணல் மூட்டைகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.