கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ளது மெய்யாத்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அழிஞ்சி மங்கலம் கிராமத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி விவசாயப் பணிகளுக்காக டிராக்டர் ஓட்டும் பணியைச் செய்து வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் இருவரும் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மகளைக் காணவில்லை எனச் சிறுமியின் தாயார் காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் மீன்சுருட்டி அருகே இருப்பதைக் கண்டறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரையும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகினேஷ் மேரி விசாரணை செய்து அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைக்கு அனுப்பி உள்ளார். போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.